விபுலானந்த அடிகளார் படைப்புகளின் கண் ஒப்பியல் நோக்கு
முத்தமிழ் வித்தகர் என அழைக்குமாற்றிலேயே விபுலானந்தர் தம் துறைபோய தன்மை புலனாகின்றது. விபுலானந்த அடிகளார் முத்தமிழ் வித்தகர் மட்டுமன்றி கலைகள், ஆங்கில மொழி இலக்கிய இலக்கணம், புராதன மொழிகள், பௌதீகம், கணிதம், விஞ்ஞானம், மெய்ஞானம், சமயம், உலகியல் வரலாறு, மானுடவியல், தத்துவவியல், என எண்ணிலடங்கா துறைகளை கற்றறிந்த புலமையாளர்.
அதுமட்டுமன்றி துறைசார் புலங்களில் அவர் அனுபவ ரீதியாக பெற்றக்கொண்ட அறிவும் கைகோர்த்தது பரந்த சிந்தனையாளராய் திகழ்ந்தார் எனலாம். இவ்விதமான பரந்த சிந்தனை போக்கு ஆய்வுலகில் அவரின் ஆய்வுப்பாங்கினை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச்சென்றிருக்கலாம்.
சமகால ஆய்வுலகில் ஒப்பியல் நோக்கு என்பது ஏதேனும் சில ஒற்றுமைகளைக் கொண்ட இருவேறு துறைகளை ஆராய்வது, அல்லது பழைமை கோட்பாடுகளுடன் தற்கால கோட்பாடுகளை ஒப்புநோக்குவது, மூலத்தின் விரிவாக்கங்களை ஒப்பிடுவது என இதுபோன்ற பல பிரமாணங்களை ஒப்பியல் நோக்காக மேற்கொள்கின்றோம். ஆயினும் அவ்வாறான பல ஆய்வுகளின் பெரும்பான்மையான முடிவுகள் கூறியது கூறலாகவே அமைகின்றது.
அடிகளார் பல்துறை நிபுணத்துவம் பெற்றிருப்பினும் அவற்றினை ஒன்றன் துணையுடன் மற்றொன்றை ஆராய்ந்து கண்டறிந்தமையே ஒப்பியல் நோக்கு கல்விக்கு வித்திட்டதாக கொள்ளலாம். அவ்வாறாயின் அவர் இசையை மையப்படுத்தி அவர் மேற்கொண்ட ஆய்வின் விளைதிறனே யாழ்நூல். இவர் யாழ்நூலில் தனது
• பொதீக அறிவைக்கொண்டு யாரழ் நரம்புகளின் அதிர்வினை உணர்ந்தார்
• பின் பௌதீகத்துடன் கணித அறிவின் துணைகொண்டு நரம்புகளின் நீளம் மற்றும் திணிவு முதலானவற்றைக் கொண்டு அதிர்வு எண்களை கண்டறிகின்றார்
• பின் இவற்றுடன் தம் இசை அறிவினை பிரதியிட்டு யாரழ் நரம்புகளின் அதிர்வுகளின் மூலம் ஸ்வரங்களையும் நுட்பசுருதிகளையும் கண்டறிந்தார்.
• கண்டறிந்த முடிவுகளை தமிழறிவைக் கொண்டு யாழ்நூலைப் படைத்தார்.
விபுலானந்தர் வாழ்ந்த காலத்தில் ஆங்கிலமும் விஞ்ஞானமும் இலங்கையின் கல்வி முறைக்குள் புகுதலின் முன் இலக்கியமும் இலக்கணமும் வழிவழியாய் ஒன்றுடன் ஒன்று கலவாது கற்று அதன் வழி பேணிக் கட்டுண்ட சமூகமாக காணப்பட்டது.
விபுலானந்தர் காலத்து அறிஞர்களில் பெரும்பான்மையினர் ஆங்கில இலக்கியம் மற்றும் மேலைத்தேய வரலாறுகளை பாண்டித்தியம் மிக்கவராயினும் அவற்றின் பயனாய் தம் தாய் மொழியுடன் இணைத்து சிந்தித்தனரா என்பது கேள்வியே ஆகும்.
அவ்விதம் பல்துறை வாண்மையாளர்கள் ஏராளமிருக்க: தாம் கற்று ஆய்ந்து அறிந்தவற்றின் துணை கொண்டு மற்றொன்றை நிறுவ முற்பட்ட ஒப்பியல் பாங்கின் மூலம்: தனித்தவம் மிக்க படைப்புக்களை முகிழ்த்தவரே விபுலானந்தர்.
இவர் தனது படைப்புகளில் பல்துறை ஒப்பியல் நோக்குடன் காணப்படுவதற்கான காரணம் யாது? சிந்தனை திறனா? நிபுணத்துவ முகிழ்ப்பா இல்லையேல் காலணித்துவ மிஷனரி கல்வி முறையின் விளைதிறனா?
எது எவ்வாறு இருப்பினும் இவ்விதம் அவர் கையாண்டுள்ள ஒப்பியல் நோக்கினை கற்றறிவதன் மூலம் எதிர்வரும் காலங்களில் இசை ஆய்வுகளை வெவ்வேறு கோணங்களில் மேற்கொள்ளலாம்.
Comments
Post a Comment